டுவிட்டர் பக்கம் முடக்கம்: நடிகை குஷ்பு டி.ஜி.பி.யிடம் பரபரப்பு புகார் மனு

நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் புகார் கொடுத்து விட்டு பரபரப்பாக பேட்டி கொடுத்தார்.

Update: 2021-07-20 20:16 GMT
சென்னை,

பிரபல நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்தார். அவர் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை சந்தித்து பேசினார்.

பின்னர் வெளியில் வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 4 நாட்களாக எனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து டுவிட்டர் நிறுவனத்திடம் புகார் கொடுத்த பிறகும் எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் எனக்கு பயம் வந்துவிட்டது.

எனது டுவிட்டர் பக்கத்தை தவறாக யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதால், டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்திக்க நேரம் கேட்டு, தற்போது அவரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளேன். எனது டுவிட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் குறிப்பிட்டுள்ளேன்.

செயல்பட தொடங்கியது

தற்போது எனது டுவிட்டர் பக்கம் செயல்பட தொடங்கி விட்டது. இருந்தாலும் எனது இணையதள முகவரி பதிவு அதில் இடம் பெறவில்லை. எனது புகைப்படம் மற்றும் பெயருடன் டுவிட்டர் பக்கம் உள்ளதால்தான் எனக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. சில முக்கிய நபர்களின் செல்போன் எண்கள் உளவு பார்க்கப்பட்டதாக சொல்லப்படும் விஷயத்தில் பா.ஜ.க.வுக்கு எந்த பங்கும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்