தாம்பரம் விமானப்படை தளத்தில்: போர் வெற்றி ஜோதிக்கு வீரவணக்கம் விழாவில் ராணுவ வீரர்கள் கவுரவிப்பு

தாம்பரம் விமானப்படை தளத்தில்: போர் வெற்றி ஜோதிக்கு வீரவணக்கம் விழாவில் ராணுவ வீரர்கள் கவுரவிப்பு,

Update: 2021-07-25 00:11 GMT
சென்னை,

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்ற 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி தமிழகத்திற்கு கடந்த 20-ந்தேதி வெற்றி ஜோதி வந்தது. ராணுவ தலைமையகம், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வெற்றி ஜோதி கொண்டு செல்லப்பட்டது. அந்தவகையில், இந்த வெற்றி ஜோதி தாம்பரம் விமானப்படை நிலையத்திற்கு நேற்று கொண்டுவரப்பட்டது. விமானப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பயிற்சியாளர்கள் வெற்றி ஜோதியை காண சாலையின் இருபுறமும் கூடியிருந்தனர். விமானப்படை தளபதி ஏர் கமடோர் விபுல்சிங் வெற்றி ஜோதியை பெற்றுக்கொண்டார். அதிகாரிகள் மற்றும் வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர். கேந்திரியா வித்யாலயா பள்ளி மாணவர்களின் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. வீரர்களின் செயல்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. 1971-ம் ஆண்டு நடந்த போரின் போது நாட்டுக்காக சிறப்பாக சேவை செய்தவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் எஸ்.வர்தமன், 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வீரர், வாரண்ட் அதிகாரி பலதன்பாயுதம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் சுற்றி வரும் இந்த ஜோதி கடைசியாக டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேற்கண்ட தகவல்கள் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்