ஆரம்பகட்ட ஆதார நிதியுதவிக்காக குறு, சிறு, நடுத்தர தொழில் தொடங்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

ஆரம்பகட்ட ஆதார நிதியுதவிக்காக குறு, சிறு, நடுத்தர தொழில் தொடங்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அழைப்பு.

Update: 2021-07-25 01:16 GMT
சென்னை,

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கம் பதிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் தொடங்கப்பட உள்ள தொழில் நிறுவனங்களான ‘ஸ்டார்ட்அப்’ என்ற நிறுவனங்களுக்கு இந்த அமைப்பு தனது திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கி வருகிறது. தொழிலின் ஆரம்பக் கட்ட தொடக்க நிலைக்குத் தேவையான ஆரம்பக் கட்ட ஆதார நிதியுதவி அளிப்பது, இந்த திட்டங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு ஸ்டார்ட்அப் ஆரம்பக் கட்ட ஆதார நிதியை, போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கைக்குரிய பத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் வீதம் அளித்தது.

அடுத்ததாக 20 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் வரை அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை www.startuptn.in இணையதளம் மூலமாக பெறலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் வரும் ஆகஸ்டு 20-ந் தேதியாகும். ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவையாகும். தகுதியுடைய நிறுவனங்கள் விண்ணப்பித்துத் தலா ரூ.10 லட்சம் ஆரம்பக் கட்ட ஆதார நிதியை வெல்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.startuptn.in என்ற இணையதளத்தை அணுகலாம். சந்தேகங்கள் இருந்தால் support@startuptn.in என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பலாம்.

இந்தத் தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்