ஏற்கனவே அச்சிடப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து தீர்ப்பு: மாஜிஸ்திரேட்டுகள் எந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கக்கூடாது

ஏற்கனவே அச்சிடப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து மாஜிஸ்திரேட்டு ஒருவர் தீர்ப்பு வழங்கிய விவகாரத்தை விசாரித்த ஐகோர்ட்டு, மாஜிஸ்திரேட்டுகள் எந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது.

Update: 2021-07-25 04:05 GMT
சென்னை,

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ஆர்த்தி. இவர், தன்னிடம் அதிக வட்டிக்கு பணம் கடனாக கொடுத்து தனது சொத்தை அபகரித்து கொண்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, ‘மனுதாரரின் புகார் மீது விசாரணை நடத்தி குற்றத்துக்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகாரில் உண்மையில்லை என தெரியவந்தால் வழக்கை முடித்து அதுகுறித்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டார்.

அச்சிட்ட படிவம்

அதன்படி மனுதாரரின் புகாரை விசாரித்த திருவண்ணாமலை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கை முடித்துவைத்தனர். அதைத்தொடர்ந்து, தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி ஆர்த்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஏற்கனவே அச்சிட்ட படிவத்தில் காலியிடங்களை மட்டும் கையால் பூர்த்தி செய்து மனுதாரரின் மனு மீது திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தது தெரியவந்தது.

பணி அழுத்தம் காரணம்

அதையடுத்து மாஜிஸ்திரேட்டுக்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக திருவண்ணாமலை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் அந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், பணி அழுத்தம் காரணமாக ஏற்கனவே அச்சிட்ட படிவத்தில் காலியிடங்களை மட்டும் கையால் பூர்த்தி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், வேறு எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எந்திரத்தனமான உத்தரவு

இந்த அறிக்கையை தயக்கத்தோடு ஏற்றுக்கொள்வதாக கூறிய நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது என திருவண்ணாமலை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், போலீசுக்கு எதிரான வழக்குகளில் ஆவணங்களை ஆராய்ந்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை சுட்டிக்காட்டிய நீதிபதி, இனி வரும் நாட்களில் எந்திரத்தனமான உத்தரவுகளை மாஜிஸ்திரேட்டுகள் பிறப்பிக்கமாட்டார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

அதன்பின்பு, மனுதாரர் ஆர்த்தி அளித்த புகாரை முறையாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

மேலும் செய்திகள்