தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பருக்குள் நடத்தி முடிக்கப்படும் அமைச்சர் கே.என். நேரு தகவல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Update: 2021-07-25 05:05 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.

தரம் உயர்வு

அரசின் பரிந்துரையின்பேரில், தமிழகத்தில் சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் சில நகராட்சிகள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார். அதைத்தொடர்ந்து அங்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும்.

விரைவில் பருவமழை காலம் தொடங்க உள்ளதால், மழைக்காலம் நிறைவு பெற்றதும் தேர்தல் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்