உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடத்தவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Update: 2021-07-27 22:53 GMT
சென்னை,

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது. அப்போது புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. எனவே காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்பட்டது.

அந்த மாவட்டங்களில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாமல் இருந்ததால் அப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடத்தப்படவில்லை. அதன் பிறகு தேர்தல் நடத்துவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தாலும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்த நிலையில் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், “இனி கால அவகாசம் தர முடியாது. செப்டம்பர் 15-ந்தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, வாக்கு சீட்டுகளை அச்சடிப்பது, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையில்

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக நேற்று மாலையில் தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு, பெரியகருப்பன் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். செப்டம்பர் 15-ந்தேதிக்குள் 9 மாவட்டங்களில் ஊராட்சி தேர்தலை நடத்துவதோடு, இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்