நடிகை மீரா மிதுன், கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார் சைபர் கிரைம் போலீசார் சம்மன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது போலீசார் 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Update: 2021-08-11 21:09 GMT
சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகாரில், திரைப்பட நடிகை மீரா மிதுன், தனது டுவிட்டர் பக்கத்தில், “தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகளை பதிவு செய்துள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை முடிவில், நடிகை மீரா மிதுன் மீது 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கைதாவாரா?

விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகை மீரா மிதுனுக்கு, சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவரை 12-ந் தேதி (இன்று) விசாரணைக்கு வரும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மீராமிதுன் இன்று கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை முடிவில் அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்