பெட்ரோல் விலை குறைப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு

தமிழக அரசு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பெட்ரோல் விலை குறைப்பு அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2021-08-13 22:59 GMT
சென்னை,

2021-22-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் நேற்று வெளியானது. இதில் பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

மக்களின் கருத்துகள் விவரம் வருமாறு:-

வரவேற்கத்தக்கது

இல்லத்தரசி ஜோதி ஜெயகுருசாமி (அம்பத்தூர்):-

பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்களும், வியாபாரிகளும் என அனைத்து தரப்பினரும் மிகுந்த வருத்தம் அடைந்து வந்தனர். இந்தநிலையில் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டில் பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருப்பது சற்று ஆறுதலை அளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது தான்.

அதேவேளை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான உரிய மானியத்தையும் அறிவித்தால் மிக நன்றாக இருக்கும்.

அவசியமான நடவடிக்கை

ஆன்-லைன் உணவு வினியோக ஊழியர் ரவி (ஆழ்வார்ப்பேட்டை) :-

இப்போதைய நிலையில் இது அவசியமான நடவடிக்கை தான். தினமும் சராசரியாக ரூ.200 முதல் ரூ.250 வரை பெட்ரோலுக்காக செலவழிக்கிறேன். இனி அதில் ரூ.10 வரை சேமிப்பாக வரும்.

பெட்ரோல் விலையை இன்னும் குறைத்தாலும் தகும். ஏனெனில் அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் மக்கள் குமுறலில் இருந்தனர். தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதின் மூலம் பெட்ரோல் விலை ரூ.3 குறையும். இது ஏழை-நடுத்தர மக்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தும்.

மக்கள் நலனுக்காக...

தனியார் நிறுவன ஊழியர் நிர்மலா முருகப்பன் (சூளைமேடு) :-

இது நிச்சயம் நல்ல நடவடிக்கைதான். தற்போதைய அரசு மக்கள் நலன்களுக்காக பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்தவகையில் பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்படும் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே.

பெட்ரோல் விலை இன்னும் குறைத்தால் நன்றாகத்தான் இருக்கும். அதற்கான முதல்படியாக இந்த அறிவிப்பு அமையட்டும். மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கை போல, மத்திய அரசும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல் விலையை கொண்டுவந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

நிம்மதி அளிக்கிறது

தனியார் நிறுவன ஊழியர் கணேஷ் (அம்பத்தூர்) :-

பெட்ரோல் விலை இப்படி உயரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இருந்தாலும் இந்த ஒரு நடவடிக்கை நிச்சயம் வரவேற்கத்தது தான். மாநில அரசு போல மத்திய அரசும் வரி குறைப்பு நடவடிக்கை எடுத்தால், மக்களுக்கு இன்னும் மகிழ்ச்சியாகவே இருக்கும். வாகனங்களை அதிகமாக பயன்படுத்துவோருக்கு பெட்ரோல் விலை குறைப்பு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தவகையில் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

தொழிலாளிகள் மகிழ்ச்சி

ஆட்டோ ஓட்டுனர் முருவம்மாள் (பெரும்பாக்கம்) :-

அனைத்து தரப்பினரையும் பெட்ரோல் விலையேற்றம் கடுமையாக பாதித்துள்ளது. தமிழக அரசின் இந்த பட்ஜெட் அறிவிப்பு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. இருந்தாலும் பெட்ரோல் விலையை இன்னும் குறைக்க வேண்டும். அதற்கான எல்லா கட்ட நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். இது எங்களைப் போல தொழிலாளிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும்.

டீசல் விலையை குறைக்க வேண்டும்

கார் டிரைவர் சரவணன் (மறைமலைநகர்) :-

பெட்ரோல் விலை குறைப்பு நடவடிக்கையால் வாடகைக்கு கார் ஓட்டுபவர்கள் தினமும் ரூ.100 முதல் ரூ.120 வரை சேமிக்க முடியும். பெட்ரோல் போலவே டீசல் விலையையும் குறைத்தால் அனைத்து வாகன ஓட்டுனர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.

அதேபோல பெட்ரோல்-டீசல் விலையை மேலும் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அனைத்து தரப்பினரையும் மேலும் மகிழ்விக்க முடியும். பெட்ரோல் விலை குறைப்பு நடவடிக்கை நிச்சயம் தேவையானது.

இவ்வாறு பெட்ரோல் விலை குறைப்புக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்