அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை வரவேற்கிறோம்: அர்ஜூன் சம்பத்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை வரவேற்கிறோம் என்று இந்து மக்கள்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

Update: 2021-08-15 17:24 GMT
சுதந்திர தினம்
சுதந்திர தினத்தையொட்டி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்றுகாலை திருப்பூர் ரெயில் நிலையம் முன்புள்ள குமரன் சிலைக்கும், குமரன் நினைவுத்தூணுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிவசேனா கட்சி இளைஞரணி மாநில தலைவர் திருமுருக தினேஷ், இந்து மக்கள் கட்சியின் மாநில தகவல் தொடர்பாளர் ஹரிகரன், மாநில அமைப்பு தலைவர் பொன்னுசாமி, ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் மணிகண்டன் உள்ளிடவர்கள் கலந்து கொண்டனர். 

பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திர போராட்டத்தில் வெள்ளையரின் தடியடியில் திருப்பூர் குமரன் காயமடைந்த இடத்தில் நினைவுத்தூண் குமரன் ரோட்டில் உள்ளது. அந்த இடத்தை புனித நினைவிடமாக அமைத்து அதன் புனிதத்தை காக்க வேண்டும். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளிடம் ஆசி பெற்று அவர்களை கவுரவித்து வருகிறோம். மாணவர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை பாடங்கள் மூலமாக தெரிவிக்க வேண்டும். பிரதமர் மோடி பதவிபேற்ற பின்பு, ரெயில் நிலையம், விமான நிலையம், பொதுத்துறை நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசியக்கொடிக்கு மரியாதையை உருவாக்கி இருக்கிறார்.

வரவேற்பு
தி.மு.க. அரசு பொறுப்பேற்று 100 நாளில் 100 ஆண்டு பேசும் சாதனை செய்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 100 நாள் சாதனை அல்ல. வேதனை. கொரோனா தடுப்பில் அரசு தோல்வியை கண்டது. கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. மத்திய அரசு மற்றும் முன்களப்பணியாளர் நடவடிக்கையால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.

மின்கட்டண உயர்வு, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் சில நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. இனியாவது தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதையும், தமிழில் அர்ச்சனை நடைமுறைப்படுத்தியதையும் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்