புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பை தரமாக புதுப்பிக்க வேண்டும் தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

ஓராண்டுக்குள் சேதம்: புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பை தரமாக புதுப்பிக்க வேண்டும் தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை.

Update: 2021-08-20 00:08 GMT
சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை வெளியேற்றி சுமார் ரூ.250 கோடி மதிப்பில் 1,900 வீடுகள் கொண்ட 9 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இந்தநிலையில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்குள்ளேயே அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதலமடைந்து காணப்படுவதாகவும், வீட்டு சுவர்கள் தொட்டாலே பெயர்ந்து கொட்டுவதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதே நிலை நீடித்தால் கட்டிடம் இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பு தமிழக அரசு தனி கவனம் செலுத்தி, உடனடியாக அந்த அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்து, அங்குள்ள குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் இதுபோன்ற தரமற்ற குடியிருப்புகளை கட்டும் ஒப்பந்ததாரர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அந்த கட்டிடத்தை தரமானதாக புதுப்பித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்