மின்சாரத்துறையில் அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தவறும் நடைபெறவில்லை முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி

‘மடியில் கனமில்லை, அதனால் எதற்கும் பயமில்லை’ என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தவறும் மின்சாரத்துறையில் நடைபெறவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2021-08-20 20:13 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மின்சாரத்துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கையிருப்பில் இருந்த 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பே நான் ஆய்வு செய்தபோது நிலக்கரி குறைவாக இருந்தது தெரியவந்தது. வடசென்னை மட்டுமல்ல, 3 அனல் மின் நிலையங்களிலும் நான் ஆய்வு செய்து, இருப்பு குறைவாக இருந்தது குறித்து விசாரித்தேன். மேலும் அனல் மின் நிலைய இணை மேலாண்மை இயக்குனரிடமும் விசாரணை நடத்தினேன்.

அ.தி.மு.க. ஆட்சியில்...

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நான் எடுத்த கணக்கை தான் தற்போது செந்தில் பாலாஜி தெரிவித்து, முதல்-அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிறார். அவர் தவறு செய்தவர்கள் யார்? என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எனது மடியில் கனமில்லை, அதனால் எதற்கும் பயமில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மின்சாரத்துறையில் எந்த தவறுகளும் நடக்கவில்லை. தி.மு.க. அமைச்சர்கள் வேண்டுமென்றே அ.தி.மு.க.வினர் மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடக்கும் போது வாய்ப்பு வழங்கினால் இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பேன்.

இவ்வாறு தங்கமணி கூறினார்.

மேலும் செய்திகள்