ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Update: 2021-08-21 05:56 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த மே 7-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் அதிகரித்தபடி இருந்தது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து சென்றது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மே 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

ஆனாலும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்டு 23-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 23-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 12-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

கொரோனா 3-வது அலை வரக்கூடும் என்ற அச்சம் இருப்பதால் தொற்றுப்பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது.  மேலும் தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவதா அல்லது அதை தளர்வுபடுத்தலாமா என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படுகிறது. 

செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதுபற்றியும் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், தியேட்டர்களையும் திறக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். 50 சதவீத ரசிகர்களுடன் தியேட்டரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அப்போது தியேட்டர்களை திறப்பதால் பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி தீவிரமாக விவாதிக்க உள்ளனர். எனவே தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுவது பற்றிய முக்கிய முடிவு  எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஊரடங்கில்  என்ன மாதிரியான தளர்வுகள் இருக்கும் என்பது பற்றிய அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்