மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி- மக்கள் உற்சாகம்

கடற்கரை மற்றும் பூங்காக்களில் 4 மாதங்களுக்கு பிறகு இயல்புநிலை திரும்பி உள்ளது.

Update: 2021-08-23 05:13 GMT
கோப்பு படம்
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தமிழகத்தில் கடற்கரைகளுக்கு செல்வதற்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மெரினா கடற்கரையில் இன்று மக்கள் காலையிலேயே திரண்டனர். 4 மாதங்களுக்குப் பிறகு கடற்கரைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகத்துடன் கடற்கரையில் திரண்டனர். 

பலர் குடும்பத்தோடு வந்திருந்து காலையிலேயே கடற்கரை மணலில் அமர்ந்து உற்சாகமாக பொழுதை கழித்தனர். மெரினா கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. கடற்கரை சாலையில் மட்டுமே பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், சர்வீஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் இன்று முதல் அந்த தடை முழுமையாக நீங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இனி எந்த தடையும் இன்றி கடற்கரைக்கு சென்று பொழுதை கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று பூங்காக்களிலும் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடற்கரை மற்றும் பூங்காக்களில் 4 மாதங்களுக்கு பிறகு இயல்புநிலை திரும்பி உள்ளது. பொதுமக்கள் எந்த தடையும் இன்றி உற்சாகமாக இந்த இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடற்கரை பகுதிகள், பூங்காக்களில் இன்று பொதுமக்கள் திரண்டு இருந்ததை காண முடிந்தது. இருப்பினும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வலியுறுத்தி மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. 

மேலும் செய்திகள்