5 மரங்கள் வெட்டியதற்கு பதிலாக 100 மரக்கன்றுகள் நட வேண்டும் ஊராட்சி நிர்வாகத்துக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு

5 மரங்கள் வெட்டியதற்கு பதிலாக 100 மரக்கன்றுகள் நட வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்துக்கு கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

Update: 2021-08-26 20:57 GMT
தேனி,

தேனி அருகே உள்ள ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் விளையாட்டு மைதானத்தில் இருந்த 5 மரங்கள் வெட்டப்பட்டன. இதையடுத்து தகுந்த காரணமின்றி மரங்கள் வெட்டப்பட்டதாக கூறி சமூக ஆர்வலர் ஒருவர் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் செயல்படும் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 15-ந்தேதி புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நீதிபதியுமான முகமது ஜியாவுதீன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இதுகுறித்து பதில் அளிக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய பொறியாளர், ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு நீதிபதி சம்மன் அனுப்பினார்.

100 மரக்கன்றுகள் நடஉத்தரவு

இதையடுத்து மின்வாரியம், ஊராட்சித்தலைவர், கிராம நிர்வாக அலுவலர் தரப்பில் கோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த விசாரணையை தொடர்ந்து நீதிபதி முகமது ஜியாவுதீன் அளித்த தீர்ப்பில், “அவசியம் இல்லாமல் மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் வெட்டப்பட்ட 5 மரங்களுக்கு பதிலாக 100 மரக்கன்றுகளை ஊராட்சி நிர்வாகம் ஒரு மாதத்துக்குள் நட வேண்டும். இதனை கிராம நிர்வாக அலுவலர் உறுதிப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட்டில் அளிக்கப்பட்ட முதல் தீர்ப்பு இதுவாகும்.

மேலும் செய்திகள்