முக கவசம், கையுறை அணிந்துவர வேண்டும்: சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்கள் வகுப்புகளுக்கு வர அனுமதி

கல்லூரி திறப்புக்கான உயர்கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதில் சுழற்சி முறையில் 50 சதவீதம் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாணவர்கள் கையுறை, முக கவசம் அணிந்துவர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-27 23:18 GMT
சென்னை,

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட உள்ள நிலையில், அவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் டி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

* பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த போதுமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

* கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மட்டும் திறக்கப்படும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஊழியர்கள் கல்லூரிகளில் சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அதை உறுதிசெய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

முக கவசம், கையுறை...

* பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் சமூக இடைவெளி, முக கவசம் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிதில் கடைப்பிடிக்கக்கூடிய ஏற்பாடுகளுடன் கட்டிடங்கள், அலுவலகங்களைத் திறக்க வேண்டும்.

* பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மொத்த மாணவர்களில் 50 சதவீத மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. மேலும் கொரோனா பரவுதலை தடுக்க தேவையான வழிகாட்டுதல்கள், நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

* வெளியில் இருந்து வரும் மாணவர்களை தெர்மல் ஸ்கிரீனிங், கைகளை சுத்தம் செய்ய சொல்வதோடு, முக கவசம், கையுறை அணிந்துவந்தால் மட்டுமே வளாகங்களில் அனுமதிக்க வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்களை வளாகத்தில் நுழைய அனுமதிக்கக்கூடாது.

ஆன்லைன் வகுப்புகள்

* நோய் அறிகுறி இருப்பவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் வளாகத்தில் இருக்க வேண்டும். தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு, சுகாதாரம், உணவு, நீர் போன்றவற்றை ஏற்பாடு செய்வதை உறுதிசெய்ய வேண்டும். சமூக இடைவெளி சாத்தியமில்லாத இடங்களில் அனைத்து பாடநெறி நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும்.

* சாத்தியமான இடங்களில் மாணவர்கள் ஆன்லைன் முறையில் வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வகுப்புகள் கலப்பு முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களுக்கு பாடங்கள் அடங்கிய மின் உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும். மாணவர்கள் ஆன்லைன் மூலம் பங்கேற்றாலும், அவர்களுக்கு வருகைப்பதிவு செய்யப்பட வேண்டும். நேரடி வகுப்புகள் திட்டமிடப்படாத நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் வழக்கமான முறையில் நடத்தப்படும்.

சுழற்சி முறையில்...

* முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்ததும், அவர்களுக்கு 4 வாரங்களுக்கு மிகாமல் சில நாட்களுக்கு அவர்களின் பாடப்பிரிவுகளுக்கு ஏற்றவகையில் சில பாடங்களை நடத்தலாம். பின்னர், அவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படலாம்.

* வாரத்துக்கு 6 நாட்கள் அட்டவணை பின்பற்றப்படவேண்டும். இதன் மூலம் வகுப்புகள் கட்டங்களாக நடத்தப்படலாம். சமூக இடைவெளியைப் பொறுத்து இருக்கைகளை ஏற்பாடு செய்யலாம்.

* வகுப்பறைகள் மற்றும் கற்றல் தளங்களில் இருக்கும் இடத்தைப் பொறுத்து, 50 சதவீதம் வரையிலான மாணவர்கள் சுழற்சி முறையில் வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

அனுமதிக்கக்கூடாது

* வரவேற்பு பகுதி உள்பட அனைத்து பகுதிகளிலும் உடல் பரிசோதனை கருவி (தெர்மல்ஸ்கேனர்), கிருமிநாசினி, முக கவசம் என போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். காய்ச்சல், இருமல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களை கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் நுழைய அனுமதிக்கக்கூடாது.

* பாதுகாப்பு மற்றும் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றிய பிறகே விடுதிகள் திறக்கப்பட வேண்டும். மாணவர்களை நெருங்கிய உறவினர்களின் வீடுகளில் தங்கி வகுப்புகளில் கலந்துகொள்ள ஊக்குவிக்கவேண்டும். இதன்மூலம் விடுதிகளில் அதிகளவில் மாணவர்கள் சேருவதை தவிர்க்கலாம்.

* ஒரு மாணவர், ஆசிரியர், ஊழியருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவுடன் அந்த நபர் அரசாங்கத்தின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவருடன் தங்கியிருந்த நண்பர்கள், தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதோடு, அறிகுறியிருந்தால் உடனே சோதிக்க வேண்டும்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்படவேண்டும். புத்தகங்கள், பிற கற்றல் பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களை பகிர்வது தடை செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்