ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு சட்டசபையில் இன்று சட்ட திருத்த மசோதா தாக்கல்

ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான சட்ட திருத்த மசோதா இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

Update: 2021-08-31 00:09 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த 13-ந் தேதி பொது பட்ஜெட்டும், 14-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 16-ந் தேதி முதல் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து 23-ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்றைய சட்டசபை கூட்டம் வழக்கம்போல காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பொதுவாக சட்டசபை கூட்டத்தில் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் இருந்து உரிய பதில் வராமல் இருந்ததால் இதுவரை கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆனால் பதில் வந்ததை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை...

கேள்வி நேரம் முடிந்ததும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்ட திருத்த மசோதா ஒன்றை தாக்கல் செய்கிறார். அதாவது விழுப்புரத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்ட திருத்தத்துக்கான சட்ட முன்வடிவை அவர் தாக்கல் செய்ய இருக்கிறார்.

இன்றைய தினமே இந்த சட்ட முன்வடிவை நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் தொடக்கத்தில் இருந்தேஅ.தி.மு.க. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்