கல்லூரி திறந்த முதல் நாளிலேயே வரம்பு மீறல்: 200 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

கல்லூரி திறந்த முதல் நாளிலேயே வரம்பு மீறல்: 200 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு.

Update: 2021-09-02 18:18 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று முன் தினம் கல்லூரிகள் திறக்கப்பட்டன. சென்னையில், கல்லூரி திறந்த முதல் நாளிலேயே சில மாணவர்கள் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட்டனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறினர்.

'பஸ் டே' என்ற பெயரில் மாநகர பஸ்சின் கூரை மீது ஏறி ஆட்டம், பாட்டம் என பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பயணித்தனர். இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 200 மாணவர்கள் மீது வழக்குகள் பாய்ந்துள்ளது.

இதில், அண்ணா சதுக்கம் - ஆவடி வழித்தட பஸ்சில் வரும் 60 மாணவர்கள் மீதும், பெசன்ட் நகர் - ஐ.சி.எப். வழித்தட பஸ்சில் வரும் 60 மாணவர்கள் மீதும், பிராட்வே - கோயம்பேடு வழித்தட பஸ்சில் வரும் 60 மாணவர்கள் மீதும், கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் மாணவர்கள் என மொத்தம் 200 பேர் மீது தடையை மீறி ஊர்வலமாக செல்லுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், தொற்றுநோய் பரவல் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தொடர்ந்து அத்துமீறும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். வழக்கமாக மாணவர்களிடம் போலீசார் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்புவார்கள். தற்போது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்