தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு

தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசாணையை உயர்கல்வித்துறை வெளியிட்டது.

Update: 2021-09-03 20:59 GMT
சென்னை,

என்ஜினீயரிங், கால்நடை, வேளாண்மை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் குறைவான எண்ணிக்கையில் சேர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கியது போல, தொழிற்கல்வி படிப்புகளிலும் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்தது.

அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவும் அதுகுறித்து பரிந்துரை செய்தது.

அரசாணை

அதன் அடிப்படையில், தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 26-ந்தேதி தாக்கல் செய்தார். அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

அதையடுத்து அந்த சட்டத்துக்கு தமிழக கவர்னர் ஒப்புதல் வழங்கிய நிலையில், உயர்கல்வி துறை சார்பில் அது தொடர்பான அரசாணையை, அந்த துறையின் முதன்மை செயலாளர் டி.கார்த்திக்கேயன் வெளியிட்டு இருக்கிறார்.

எந்தெந்த படிப்புகள்

அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல்கலைக்கழகங்கள், தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இருக்கும் தொழிற்கல்வி படிப்புகளான என்ஜினீயரிங் படிப்புகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., வேளாண்மை படிப்புகளில் பி.எஸ்.சி., பி.எஸ்.சி. ஹானர்ஸ், பி.டெக்., கால்நடை படிப்புகளில் பி.விஎஸ்சி., கால்நடை வளர்ப்பு/பி.டெக்., மீன்வள படிப்புகளில் இளநிலை மீன்வள அறிவியல்/ பி.டெக்.,

சட்டப்படிப்புகளில் பி.ஏ. எல்.எல்.பி., பி.காம். எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.ஏ. எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.பி.ஏ., எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.சி.ஏ. எல்.எல்.பி. (ஹானர்ஸ்) போன்றவற்றில் அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு முன்னுரிமை அளிக்கப்படும்.

என்ஜினீயரிங் கலந்தாய்வில் சேர்ப்பு

சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத இடங்கள் "பொது வகை" உட்பட அனைத்து இட ஒதுக்கீடுகளுக்கும் பொருந்தும்.

தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதிக்காத வகையில் இந்த 7.5 சதவீத ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வில் இந்த 7.5 சதவீத ஒதுக்கீடும் தனியாக சேர்த்து ஏற்கனவே தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு கலந்தாய்வுக்கான அட்டவணையை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்