சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

Update: 2021-09-08 21:50 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி ஆகியோர் நேற்று சில பிரச்சினைகள் பற்றி பேச முற்பட்ட நிலையில் அனுமதி கிடைக்காததை அடுத்து அவையில் இருந்து அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் கலைவாணர் அரங்கத்தில் நிருபர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-

சட்டசபையில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து கே.பி.முனுசாமி பேச முற்பட்டபோது சபாநாயகர் அனுமதிக்கவில்லை. நாங்கள் எவ்வளவே வற்புறுத்தியும், பேசுவதற்கு அனுமதி தரப்படவில்லை. பின்னர் ஒரு நிமிடம் மட்டும் அனுமதி அளிப்பதாக தெரிவித்தார். அந்த நேரத்தில் கே.பி.முனுசாமி கருத்தை தெரிவித்தார். ஆனால் அந்த கருத்தை இப்போது அவை குறிப்பிலிருந்து எடுத்துவிட்டனர்.

நானும் எழுந்து அவசர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து பேச வாய்ப்பு தரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். அப்போதும் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே நான் சில கருத்துக்களைச் சொல்ல முயன்றேன். அதை அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் வேண்டுகோள் வைத்தேன். அதற்கும் அவர் அனுமதி தரவில்லை.

அ.தி.மு.க. அரசு திட்டங்கள்

உழைக்கும் மகளிர் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை பிரதமர் இதே கலைவாணர் அரங்கில் வந்து தொடங்கி வைத்தார். உழைக்கும் மகளிர் உரிய நேரத்திலே வேலைக்கு செல்வதற்கும், வேலை முடித்து வீட்டிற்கு திரும்புவதற்கும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த திட்டத்தை இந்த அரசு கைவிட்டுவிட்டது.

அ.தி.மு.க. அரசு 24 வேளாண்மை விற்பனை குழுவிற்கு உறுப்பினரை நியமித்து, தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்தது. அதையும் திரும்பப் பெற சட்டமசோதாவை கொண்டு வந்துள்ளார்கள்.

மேலும், ஜெயலலிதாவின் பெயரிலே விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று அறிவித்து அதற்காக கவர்னரிடம் அனுமதி பெற்று, அதற்கு துணைவேந்தர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு பணி தொடங்கும் காலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், உயர்கல்வித்துறை அமைச்சர் அதை நிராகரித்து, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று தெரிவித்து அதையும் முடக்கினார். அ.தி.மு.க. கொண்டு வந்த எந்த திட்டத்தையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட ஒரே காரணத்திற்காக அந்த பல்கலைக்கழகத்தை ரத்து செய்துள்ளார்கள்.

திட்டங்கள் முடக்கம்

காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி வாளாகத்தில் ஜெயலலிதாவின் உருவச்சிலை அமைக்கப்பட்டது. அதற்கு தொடர்ந்து நாங்கள் மாலை அணிவித்து வந்தோம். புதிய அரசு அமைந்தவுடன் மாலை அணிவிக்க பயன்படுத்தப்பட்ட ஏணியை அகற்றி விட்டார்கள். அங்கே மாலை அணிவிப்பதை தடை செய்துள்ளார்கள். அதையும் நீங்கள் அனுமதிக்கவேண்டும் என்று கேட்டோம்.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உரிய நேரத்தில் திருமணம் செய்யவேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது. அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அந்த திட்டத்தை இந்த அரசு சீர்குலைக்க வைக்கிறது.

ஜெயலலிதா அரசு கொண்டு வந்த திட்டங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக முடக்கிகொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் அவையில் தெரிவிக்க வேண்டும் என்றுதான் கே.பி.முனுசாமி பேச முற்பட்டார். அதை சபாநாயகர் அனுமதிக்கவில்லை. நாங்கள் பேசியதையும் அவை குறிப்பில் இருந்து எடுத்துவிட்டார். அதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்கள் கவனம்

அதைத் தொடர்ந்து, ‘’பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவருகிறது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவரின் பார்வை என்ன? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, ''இதை அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள். மாணவர் சமுதாயம் மிக முக்கியமானது. பள்ளிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளன. அரசு இதை கவனமாக கையாள வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும். பெற்றோர்களும் தனிக்கவனம் செலுத்தவேண்டும். கொரோனா தொற்று வராமல் தடுக்க அரசு அறிவித்த வழிமுறைகளை மாணவர்கள் தவறாமல் பின்பற்றவேண்டும்” என்று பதிலளித்தார்.

மேலும் செய்திகள்