தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 41 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு

நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் தமிழகத்தில் 41 ஆயிரம் வழக்குகள் இரு தரப்பினரின் சம்மதத்துடன் முடிவுக்கு வந்ததாக மாநில சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி கூறினார்.

Update: 2021-09-11 21:27 GMT
மக்கள் நீதிமன்றம்
சுப்ரீம் கோர்ட்டு முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வரை நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக ஆண்டுக்கு 4 முறை தேசிய அளவிலான ‘லோக் அதாலத்' என்ற மக்கள் நீதிமன்றம் நாடு முழுவதும் தேசிய சட்டப்பணி ஆணை குழு மூலம் நடத்தப்படுகின்றன.அந்த வகையில் கடந்த ஏப்ரல் 10 மற்றும் ஜூலை 10-ந் தேதிகளில் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. 3-வது முறையாக நேற்று நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது.இதில் செக் மோசடி வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு உள்ளிட்ட சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

மூத்த நீதிபதி எம்.துரைசாமி
தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு தலைவரும், ஐகோர்ட்டு மூத்த நீதிபதியுமான எம்.துரைசாமி மேற்பார்வையில் தமிழகத்தில் தேசிய லோக் அதாலத் நேற்று நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 375 அமர்வுகள் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.அதேபோல, ஐகோர்ட்டு சட்ட சேவை மையத்தின் தலைவரும், ஐகோர்ட்டு மூத்த நீதிபதியுமான டி.ராஜா மேற்பார்வையில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.ஆனந்தி, கே.முரளிசங்கர் ஆகியோர் தலைமையில் 2 அமர்வுகளும், 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 3 அமர்வுகளும் வழக்குகளை விசாரித்தன.

ரூ.330 கோடி

இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி கே.ராஜசேகர் கூறியதாவது:-

தேசிய லோக் அதாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மொத்தம் 380 அமர்வுகள், வழக்கு தொடர்பான இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குகளை விசாரித்தன.இதில், இரு தரப்பினரின் முழு சம்மதத்துடன் 41 ஆயிரத்து 517 வழக்குகள் முடிவுக்கு வந்தன. இதன் மூலம் ரூ.330 கோடியே 83 லட்சத்து 7 ஆயிரத்து 584 ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்