காப்பீட்டு திட்டத்தில் மனநல சிகிச்சையை சேர்க்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு

காப்பீட்டு திட்டத்தில் மனநல சிகிச்சையை சேர்ப்பதுடன், அனைத்து தாலுகா ஆஸ்பத்திரிகளிலும் மனநல சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2021-09-11 21:52 GMT
கைதிகளுக்கு மனநல சிகிச்சை
மதுரையை சேர்ந்த ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில், மன அழுத்தத்திற்கு ஆளாகும் கைதிகளுக்கு மனநல சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவ வசதி, மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலர், நர்சு, மருந்தாளுனர் ஆகியோரைக்கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே நீதிபதிகள் கிருபாகரன் (ஓய்வுபெற்று விட்டார்), புகழேந்தி ஆகியோர் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். தற்போது நீதிபதிகள் இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தாலுகா ஆஸ்பத்திரிகளில்...
நம் நாட்டில் உள்ளவர்களில் 7.5 சதவீதம் பேர் மன ரீதியான பாதிப்புகளை சந்திக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. 136 கோடி மக்கள் தொகையைக்கொண்ட நம் நாட்டில் போதுமான மனநல ஆஸ்பத்திரிகள் கிடையாது. மனநல டாக்டர்கள், உளவியல் நிபுணர்கள், குழந்தை நல ஆலோசகர்கள் பற்றாக்குறையில் உள்ளனர். நாடு முழுவதும் மனநல ஆஸ்பத்திரிகளை அதிகரிக்க வேண்டும். முதுகலை மருத்துவப்படிப்பை அதிகரிப்பதன் மூலம் கூடுதல் டாக்டர்களை உருவாக்க முடியும். வெளிநோயாளியாகவே பலரும் சிகிச்சை பெறும் நிலையில் ஒவ்வொரு தாலுகா ஆஸ்பத்திரிகளிலும் மன நல சிகிச்சை அளிக்க வேண்டும்.

காப்பீட்டு திட்டம்
மனநல சுகாதார சட்டத்தின்படி, மனநல சிகிச்சையை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். சாதாரண மக்களும் காப்பீடு மூலம் மனநல சிகிச்சை பெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கர்நாடகாவில் மனநல சிகிச்சை முறை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுகிறது. இதை மத்திய அரசும், தமிழக அரசும் பின்பற்ற வேண்டும். உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி, மனநலம் மற்றும் மன அழுத்தத்தால் அதிகம் பேர் பாதித்துள்ள நம் நாட்டில் அவ்வப்போது ஆய்வு செய்து, இதற்காக ஒருங்கிணைந்த திட்டத்தை தயாரித்து மத்திய-மாநில அரசுகள் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை பெற்றவர்களுக்கு மறுவாழ்வு அளித்து, மருத்துவ பரிசோதனைகளை நடத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்