புதுச்சேரியில் மருத்துவம், வேளாண் பல்கலைக்கழகங்கள் ரங்கசாமி

புதுச்சேரிக்கு விரைவில் மருத்துவம், வேளாண் பல்கலைக்கழகங்கள் வர உள்ளன என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

Update: 2021-09-13 15:24 GMT
புதுச்சேரி
புதுச்சேரிக்கு விரைவில் மருத்துவம், வேளாண் பல்கலைக்கழகங்கள் வர உள்ளன என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுவை காலாப்பட்டில் தொழில்நுட்ப பல்கலைக்கழக தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

சிறந்த கல்லூரி

புதுவை என்ஜினீயரிங் கல்லூரியானது 1986-ம் ஆண்டு 200 ஏக்கரில் 150 மாணவ, மாணவிகளுடன் தொடங்கப்பட்டது. இப்போது 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். 
நான் டெல்லி சென்றபோது அங்கிருந்த அதிகாரிகள் புதுவை என்ஜினீயரிங் கல்லூரியின் சிறப்பு குறித்து பேசினார்கள். இந்திய அளவில், ஆசிய அளவில் சிறந்த கல்லூரி என்று கூறினார்கள்.
இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளை பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பணிக்கு தேர்வு செய்கின்றன. நிறைய கல்லூரிகள் வந்தபோதிலும் இதற்கு தனி மரியாதை உண்டு. இங்கு படித்தவர்கள் வெளிநாடுகளிலும் பணிபுரிகிறார்கள். அத்தகைய கல்லூரியில்தான் இப்போது பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு உள்ளது.

முதல் பல்கலைக்கழகம்

இதற்கு கடந்த 2015-ம் ஆண்டு அங்கீகாரம் கிடைத்தது. 2016-ல் நிர்வாக அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகமாக இது விளங்குகிறது. விரைவில் வேளாண் பல்கலைக்கழகம், மருத்துவ பல்கலைக்கழகம் போன்றவை வர உள்ளன. பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு நல்ல கல்வியை தரும்.
கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும்போது மாணவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. குறிப்பாக கட்டணம் உயரும் என்ற அச்சம் உள்ளது. பல்கலைக்கழகமாக மாறும்போது நாம் பல மாநில மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் எந்தவித சங்கடமும் வராது.
இந்த நிறுவனம் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமாக வளர்ந்து வருகிறது. இங்கு பணிபுரிபவர்களில் 98 சதவீதம் பேர் ஆராய்ச்சி படிப்பு முடித்துள்ளனர். இணைப்பு கல்லூரியாக காரைக்கால் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
----------

மேலும் செய்திகள்