தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசி வேண்டும்; மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்

வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-09-14 00:06 GMT
3.81 கோடி தடுப்பூசி

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் ‘மெகா’ தடுப்பூசி முகாம் அமைக்க தேவையான தடுப்பூசி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் பெரிதும் வெற்றி பெற்றது. இதில் 28.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கடந்த 12-ந் தேதி வரை மத்திய அரசு தமிழகத்துக்கு 3 கோடியே 81 லட்சத்து 41 ஆயிரத்து 820 தடுப்பூசி மருந்துகள் வழங்கியுள்ளன. மேலும் 1.93 கோடி ஊசிகள் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற ‘மெகா’ தடுப்பூசி முகாமின் வெற்றியை தொடர்ந்து கூடுதலாக தடுப்பூசி முகாம்கள் நடத்த எண்ணி உள்ளோம். தமிழகத்தில் மேலும் பலருக்கு தடுப்பூசி போடவேண்டியுள்ளது. தமிழகத்தின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, தினசரி தடுப்பூசி முகாம்கள் தவிர்த்து தகுந்த இடைவேளையில் தொடர்ந்து ‘மெகா’ தடுப்பூசி முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

50 லட்சம் தடுப்பூசி

அந்த வகையில் தமிழகத்தில், வாரத்தின் 6 நாட்களில் தலா 5 லட்சம் பேருக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மெகா’ தடுப்பூசி முகாம் நடத்தி 20 லட்சம் பேருக்கும் என வாரத்துக்கு 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. வாரம் ஒருமுறை ‘மெகா’ தடுப்பூசி முகாம் நடத்துவதை கருத்தில் கொண்டு, வாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசியும், அதை பொதுமக்களுக்கு போட தேவையான ஊசிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

இதன் மூலம் தமிழகத்தில் வரும் அக்டோபர் 31-ந் தேதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி போட முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்