4 கட்டங்களாக நடத்தப்பட்ட ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

4 கட்டங்களாக நடத்தப்பட்ட ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் அஸ்வின் ஆபிரகாம் 100 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Update: 2021-09-15 19:17 GMT
சென்னை,

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஜே.இ.இ. முதன்மை தேர்வு 4 கட்டங்களாக 13 மொழிகளில் நடத்தப்பட்டது.

அதன்படி, பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு பிப்ரவரி, மார்ச், ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது. இந்த 4 கட்டங்களிலும் 10 லட்சத்து 48 ஆயிரத்து 12 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 8 பேர் பங்கேற்று தேர்வை எழுதினார்கள். தேர்வு 334 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 925 மையங்களில் நடந்து முடிந்தது.

தமிழக மாணவர் அஸ்வின் ஆபிரகாம்

இந்த நிலையில் அவர்களுக்கான தேர்வு முடிவு நேற்று அதிகாலையில் வெளியாகி இருக்கிறது. தேர்வர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். 4 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்வில் கலந்துகொண்ட தேர்வர்கள் எதில் சிறந்த மதிப்பெண்ணை பெற்றார்களோ, அதை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) மதிப்பெண்ணாக வெளியிட்டு இருக்கிறது.

இதில் 100 சதவீத மதிப்பெண் பெற்ற 44 பேரின் பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருக்கிறது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் அஸ்வின் ஆபிரகாம் இடம்பெற்று இருக்கிறார். அதிகபட்சமாக டெல்லி, தெலுங்கானாவில் இருந்து தலா 7 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 24 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தனர்.

20 பேருக்கு தேர்வு எழுத தடை

இதுதவிர, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.ரோஷனா என்ற மாணவி 99.99 சதவீத மதிப்பெண் பெற்று மாநில அளவிலான சிறந்த மதிப்பெண் பெற்ற பெண்கள் பட்டியலில் உள்ளார்.

இந்த தேர்வின்போது முறைகேடு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 20 பேருக்கு 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு அவர்களுடைய தேர்வு முடிவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்