தொலைதூர முறையில் தொழில்கல்வி நடத்த தடை கேட்டு வழக்கு: அண்ணாமலை பல்கலைக்கழகம் பதில் அளிக்க வேண்டும்

தொழில்கல்விகளை தொலைதூர கல்வி முறையில் நடத்த தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம்பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-21 21:51 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தொழில்கல்வி

பல்கலைக்கழக மானியக்குழு, தொலைதூர கல்வி முறையில் மருத்துவம், என்ஜினீயரிங், விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளை தடை செய்து 2019-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் திறந்தநிலை மற்றும் தொலைத்தொடர்பு விதிகள், மேற்குறிப்பிட்ட படிப்புகளை தொலைதூர கல்வி முறையில் நடத்த தடை செய்தது மட்டுமின்றி, நேரடி முறையில்தான் பயில வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பாதிப்பு

ஆனால் அங்கீகாரம் இல்லாத படிப்புகளை அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்திவருகிறது. இதில் பலர் சேர்ந்து கல்வி கற்று வருகின்றனர். அங்கீகாரம் இல்லாத கல்வியை கற்பதால் அவர்களது எதிர்காலம் பாதிப்படைகிறது.

அண்ணாமலை பல்கலைக் கழகம் 2015-ம் ஆண்டு முதல் தொலைதூர கல்வி நடத்த அனுமதி பெறவில்லை.

தடை வேண்டும்

எனவே பல்கலைக்கழக மானியக் குழுவால் தடை செய்யப்பட்ட படிப்புகளை அண்ணாமலை பல்கலைக்கழகம் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி முறையில் நடத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்குக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்