கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரம்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் வரைபடம் தயாரிக்கும் பணியானது நவீன தொழில்நுட்பத்துடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-09-21 22:57 GMT
சென்னை,

தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் நவீன ரோவர் உபகரணங்களை பயன்படுத்தி அளவீடு செய்யும் பணிகளை கடந்த 8-ந்தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளை நவீன ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பத்துடன் நில அளவை செய்து வரைபடம் தயாரிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்பேரில் அனைத்து கோவில்களிலும் அசையா சொத்துகளை கண்டறியும் குழு மற்றும் பரிசீலனை குழு அமைக்கப்பட்டு நில அளவை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நவீன தொழில்நுட்பம்

இப்பணியில் ஜி.ஐ.எஸ். என்ற நவீன தொழில்நுட்பத்தின்படி வரைபடம் வரையும் பணியை மேற்கொள்ள அரசு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் வழங்கிய சிபாரிசின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட 200 நில அளவையாளர்களைக் கொண்டு அனைத்து நில அளவை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம் நாகேஸ்வரர் கோவில், காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம் கெட்டி விநாயகர் கோவில், பிரம்மேஸ்வரர் கோவில், கொடுமுடி வட்டம் வரதராஜப் பெருமாள் வகையறா கோவில், தூத்துக்குடி மாவட்டம், சங்கர நாராயணசுவாமி கோவில், சங்கரன்கோவில், திருமலைகுமார சுவாமி கோவில், சேலம் மாவட்டம், சுகவனேஸ்வரர் கோவில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளின் வரைபடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

சுவாதீனம் பெறப்படும்

கோவில்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான அசையா சொத்துகள், விவசாய நிலங்கள், காலிமனைகள், காலியிடங்கள் என அனைத்துக்கும் அளவீடு செய்து வரைபடம் தயாரிக்கும் பணி நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரோவர் கருவிகளை கொண்டு தொடங்கி உள்ளது. இக்கருவியை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நிறுவும்போது செயற்கைகோள் மூலம் அந்த இடத்தின் வரைபடம் நமக்கு கிடைத்துவிடும். விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு அதுதொடர்பான விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதன்மூலம் கோவிலுக்கு சொந்தமான அசையா சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்படும்.

மேற்கண்ட தகவல் இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்