நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக சசிகலாவின் பையனூர் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து

நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக சசிகலாவுக்கு சொந்தமான பையனூர் தோட்டத்தில் ஒரு பகுதியை கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-23 22:20 GMT
சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் கிராமத்தில் சசிகலாவுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. 784 சதுர மீட்டர் பரப்பளவில் கொண்ட இந்த தோட்டத்தில் தென்னை உள்ளிட்ட பல வகை மரங்கள் உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு சாலை விரிவாக்கத்துக்காக இந்த தோட்டத்தில் ஒரு பகுதியை பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்த தாசில் தார் நடவடிக்கை எடுத்தார்.

கையகப்படுத்தும் நிலத்துக்குரிய இழப்பீட்டை வழங்குவதாக சசிகலாவுக்கு நோட்டீசும் பிறப்பித்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கடந்த 2011-ம் ஆண்டு சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

சட்டப்படி இல்லை

10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது. சசிகலா தரப்பில் வக்கீல் ஏ.அசோகன் ஆஜராகி, ‘இந்த நிலத்தை கையகப்படுத்தும் நடைமுறையை சட்டப்படி அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் நிலத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கூட்டத்தில் மனுதாரர் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. எனவே மனுதாரரின் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

நடவடிக்கை ரத்து

இந்த வழக்கிற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “சாலை விரிவாக்க திட்டத்துக்கு அந்த நிலம் அவசியமானது. மனுதாரருக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக எழுத்துப்பூர்வ பணி முடிந்துவிட்டது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நில ஆர்ஜிதம் மட்டும் முடியவில்லை. உரிய இழப்பீடு வழங்க அரசு தயாராக உள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இந்த வழக்கை ஏற்று கொள்கிறேன். மனுதாரரான சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தின் ஒருபகுதியை நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்கிறேன்” என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்