பள்ளிகளை திறந்ததும் சத்துணவு திட்டத்தை தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளிகளை திறந்ததும் சத்துணவு திட்டத்தை தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-09-24 19:21 GMT
சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக்கோரி ‘சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப்’ என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஏற்கனவே பல இடைக்கால உத்தரவுகளை தமிழக அரசுக்கு பிறப்பித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை. அங்கன்வாடி மையங்கள் மூலம் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன’ என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘அடுத்த சில வாரங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என செய்திகள் வெளியாவதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுவதால், பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தமிழக அரசு தொடங்கவேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்