தமிழகத்தில் தினமும் 20 பேர் டெங்குவால் பாதிப்பு டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

மேற்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைகிறது என்றும், தமிழகத்தில் தினமும் 20 பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2021-10-03 22:48 GMT
சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 24 ஆயிரத்து 760 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 600 தடுப்பூசி முகாம்கள் நடந்தன. தமிழகத்தில் சனிக்கிழமை இரவு வரை 4.79 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது 33.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேற்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவதற்கான அறிகுறி காணப்படுகிறது.

புதிய வகை கொரோனா

தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனாவால் 90 சதவீத இறப்புகள் தடுப்பூசி போடாதவர்களுக்கே ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் 42 சதவீத முதியோர்களே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 22 லட்சம் பேர் முதல் தவணை செலுத்தி, 2-வது தவணை செலுத்தவேண்டிய நிலையில் உள்ளனர்.

ஒரு கட்டத்தில் 3.11 லட்சமாக இருந்த சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை தற்போது 17 ஆயிரமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் இதுவரை மேற்கொண்ட ஆய்வில் டெல்டா வகை கொரோனா வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. வேறு புதிய வகை கொரோனா வைரஸ் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. மரபணு பரிசோதனை கூடம் தொடங்கியபிறகு வந்த 20 மாதிரிகளும் டெல்டாவாகவே இருந்தன.

டெங்கு பாதிப்பு

தற்போது கொரோனாவுடன் டெங்கு பாதிப்பும் கவனிக்கப்பட வேண்டியதாகி உள்ளது. இது மாவட்ட கலெக்டர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. தண்ணீரை மூடிவைக்காத நிலையால் ஏடிஸ் கொசு பரவக்கூடும். தமிழகத்தில் நாள்தோறும் 20 வரை டெங்கு பாதிப்பு எண்ணிக்கை பதிவாகிறது.

கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 2 ஆயிரத்து 410 ஆக டெங்கு பாதிப்பு இருந்தது. தற்போதுவரை இந்த ஆண்டில் 2 ஆயிரத்து 919 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 2 டெங்கு மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. பூச்சியியல் வல்லுனர்கள் கொசுக்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஓமந்தூரார் ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஜெயந்தி மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்