இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 2020-2021-ம் ஆண்டு காரிப் சந்தைப்பருவத்தில் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-10-04 23:10 GMT
சென்னை,

தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதில் தலைமைச்செயலாளர் இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் முகமது நசிமுதீன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மைத்துறை இயக்குனர் ஆ.அண்ணாதுரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குனர் வே.ராஜாராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்பு ஒருபோதும் இல்லாத அளவிற்கு, கடந்த செப்டம்பர் 30-ந் தேதி முடிவடைந்த 2020-2021-ம் ஆண்டு ‘காரிப்’ சந்தைப்பருவத்தில் 44.90 லட்சம் டன் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ‘காரிப்’ பருவத்தில் 12.50 லட்சம் டன் அளவிற்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர்களுக்கு அறிவுரை

மேலும், முதன் முறையாக இந்த கொள்முதல், விவசாயிகளுக்கு மட்டுமே பலன் அளிக்கக்கூடியதை உறுதி செய்வதற்காக ஆன்லைன் முறையிலும் பதிவு செய்து, நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1-ந் தேதி முதல் தொடங்கும் ‘காரிப் 2021-2022’ சந்தைப் பருவத்தில் இதுவரை 752 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில், 608 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், விவசாயிகள் பயனடையும் வகையில் இந்த ஆண்டு 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப்படும் இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கும், நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கும் அனுமதி வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசிடம் கோரிக்கை

கடந்த காலங்களில் இல்லாத வகையில், எதிர்பாராத அளவிற்கு, செப்டம்பர் மாத இறுதியிலும், அக்டோபர் முதல் வாரத்திலும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரக்கூடிய நிலையில், நெற்பயிர்களும், நெல் மூட்டைகளும் ஈரம் அடைந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு, நெல்லை கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை உயர்த்துவதற்கான மத்திய அரசின் ஒப்புதலை பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய பண பட்டுவாடாவை, விவசாயிகளுக்கு எவ்வித காலதாமதமும் இன்றி வழங்கிட வேண்டுமெனவும், டெல்டா மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அலுவலர்கள் உடனடியாக மாவட்டங்களுக்கு சென்று இந்த நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்து, எவ்வித தடங்கலும் இன்றி கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்