மகாளய அமாவாசை: திதி, தர்ப்பணம் செய்யும் உரிமையை மறுப்பதா? அண்ணாமலை கண்டனம்

மகாளய அமாவாசை: திதி, தர்ப்பணம் செய்யும் உரிமையை மறுப்பதா? அண்ணாமலை கண்டனம்.

Update: 2021-10-06 19:57 GMT
சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மூத்தோர் வழிபாடு தமிழர்களின் கலாசாரத்தோடு ஒன்றிய நிகழ்வு. மகாளய அமாவாசையை முன்னிட்டு தங்களின் குடும்ப நலத்திற்காகவும், தங்கள் குழந்தைகளின் நலத்திற்காகவும் முன்னோர்களுக்கு நீர் நிலைகளில் திதி, தர்ப்பணம் செய்யும் வழக்கத்தை நீண்ட நாட்களாக தமிழர்கள் கடைபிடித்து கொண்டிருக்கும் நிலையில், இன்றைக்கு அவர்களது உரிமைகள் தமிழக அரசால் மறுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதுபோல ஈமக்கிரியை மற்றும் திதி செய்வதற்காக மக்கள் கடற்கரையிலும், ஆற்றுப்படுகையிலும், கோவில் குளங்களுக்கும் சென்றபோது அங்கு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவின் பல பகுதிகளில்

இருந்தும் பலர் அமாவாசைக்கு ராமேஸ்வரம் வந்திருந்தனர். அவர்களை கடற்கரைக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், அதே கடற்கரையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். கூட்டமாக படப்பிடிப்பு நடத்துகிறார்கள். படப்பிடிப்பு தளத்திற்கு கொரோனா வராதா?.

சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் குளத்திற்கு மக்கள் வழிபாடு நடத்த வந்தபோது, காவல்துறையினர் அவர்களை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. அந்த தெருக்களில் இருந்த பொது மக்களிடம், காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், மக்கள் கைகளில் இருந்த பழம், தேங்காய் உள்ளிட்டவைகளை தட்டி பறித்து கீழே தள்ளியதாகவும் சொல்லப்படுகிறது. இதை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்