22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-10-07 19:24 GMT
சென்னை,

டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடந்து வருவதையொட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.

இந்தநிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக்கழகத்தால் கொள்முதல் செய்யப்படுவதாகவும், ஆனால் டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக ஈரப்பதம் 20 சதவீதத்துக்குமேல் உள்ளதால் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு அறுவடைப்பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் விவசாயிகளும், விவசாயிகள் சங்கங்களும் தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

நெல் கொள்முதலை தொடங்கி உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்தால்தான் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல் முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டு தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். இதுவே அவர்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே முதல்-அமைச்சர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நெல் கொள்முதல் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டின் பருவநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு செல்லும் வகையில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யவும், நெல் கொள்முதலை அதிகரிக்கவும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விவசாயிகள் வாழ்வு வளம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்