முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவீத ஒதுக்கீட்டிற்கான தகுதிகாண் தேதியை மாற்றியமைக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவீத ஒதுக்கீட்டிற்கான தகுதிகாண் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2021-10-10 21:48 GMT
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 2021-22-ம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத சேவை ஒதுக்கீட்டில் சேர்வதற்கான தகுதிகாண் நாள் குறித்த நிபந்தனை இளம் மருத்துவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது அரசின் தவறில்லை என்றாலும்கூட, இந்த பாதிப்பை போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

இந்த விஷயத்தில் அரசோ, மருத்துவக் கல்வி இயக்குனரோ தெரிந்து எந்தத் தவறையும் செய்யவில்லை. மாறாக, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்' தேர்வும், கலந்தாய்வும் கொரோனா காரணமாக மிகவும் தாமதமாக நடப்பதால், அதற்கேற்ற வகையில் சேவை ஒதுக்கீட்டிற்கான தகுதிகாண் நாளை திருத்தியமைக்கத் தவறிவிட்டனர். அதனால், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முதுநிலை கல்வி வாய்ப்பை இழப்பார்கள்.

கொரோனா பாதிப்பு காரணமாகத்தான் இந்தச் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது நடப்பாண்டில் மட்டுமே நிகழும் தனித்த நிகழ்வு ஆகும். எனவே, இதை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி நடப்பாண்டில் மட்டும் செப்டம்பர் மாதம் வரை இரு ஆண்டுகள் அரசு மருத்துவர் பணியை நிறைவு செய்தவர் சேவை ஒதுக்கீட்டை பெறும் வகையில் அதற்கான தகுதிகாண் தேதியை அரசு மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்