கடற்கரையில் கொத்து கொத்தாய் செத்து ஒதுங்கிய மீன்கள்

கீழக்கரை முதல் ஏர்வாடி வரை கொத்து கொத்தாய் செத்து கடற்கரையில் நேற்று ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கி கிடந்தன. கடல்நீர் நிறம் மாறியது இதற்கு காரணமா? என ஆய்வு நடந்து வருகிறது.

Update: 2021-10-11 20:18 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பூங்கோறை என்று சொல்லக்கூடிய ஒருவிதமான பச்சைப்பாசிகள் இனப்பெருக்கத்திற்காக கடல் நீரில் முழுமையாக படர்ந்து விடும். இந்த பச்சை பாசியால் கடல்நீர் பச்சை நிறமாக மாறிவிடும்.

தற்போது கீழக்கரை, ஏர்வாடி கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே பச்சை பாசிகள் படர்ந்துள்ளன. இந்தநிலையில் கீழக்கரை முதல் ஏர்வாடி வரையிலான கடற்கரை பகுதியில் நேற்று ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடந்தன. குறிப்பாக கீழக்கரை துறைமுக பாலம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓரா, நகரை, கிளி மீன், கணவாய், விளை மீன், நெத்திலி, அஞ்சாலை உள்ளிட்ட பல வகையான மீன்கள் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கி கிடந்தன.

அதிகாரிகள் ஆய்வு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது இறந்து கிடந்த மீன்கள் மற்றும் நிறம் மாறிய கடல் நீரை ஆய்வுக்காக சேகரித்து சென்றனர்.

இதுபற்றி கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், பச்சை பாசிகள் கரையோர கடல் பகுதியில் அதிக அளவில் படர்ந்திருந்த காரணத்தால் மீன்கள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்றார்.

மேலும் செய்திகள்