கோவில் பாதுகாப்புக்கு 10 ஆயிரம் பணியாளர்கள் நியமனம் அமைச்சர் சேகர்பாபு தகவல்

தமிழகம் முழுவதும் கோவில் பாதுகாப்புக்கு 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-11 22:25 GMT
சென்னை,

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் காஞ்சீபுரம் மற்றும் வேலூர் மண்டலத்தில் உள்ள அனைத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-

ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திருப்பணிகள், திருத்தேர், திருக்குளங்கள், நந்தவனங்கள், திருமண மண்டபங்கள், புதிய கல்லூரிகள், நலத்திட்ட உதவிகள், பணியாளர் நியமனம் உள்பட பல்வேறு பணிகள் அடங்கும்.

இந்த அறிவிப்புகளை ஓராண்டுக்குள் செயல்படுத்துவதில் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை திருக்கோவில் பணியாளர்கள் உடனே செயல்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு பணியாளர்கள்

தற்காலிகமாக நியமிக்கப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றி வந்த பணியாளர்களுக்கு, முதல்-அமைச்சர் பணிநியமன ஆணைகளை விரைவில் வழங்க இருக்கிறார். மானிய கோரிக்கையில் அறிவித்தப்படி தமிழ்நாடு முழுவதும் திருக்கோவில்களின் பாதுகாப்புக்கென 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் (நிர்வாகம்) கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்