தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-19 08:22 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. 

இதன் தொடர்ச்சியாக இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்