வெளியூர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை அனுப்புவதாக கூறி நூதன மோசடி பெண் உள்பட 2 பேர் கைது

சென்னையில் மோட்டார் சைக்கிள்களை வெளியூர்களுக்கு சரக்கு வாகனம் மூலம் அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-20 00:13 GMT
சென்னை,

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீனா (வயது30). இவர் அதே பகுதியில் பாஸ்ட் கார்கோ பாக்கெர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். வெளியூர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் சரக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்படும், தேவைப்படுபவர்கள் அணுகலாம், என்று ஆன்லைன் மூலம் பிரவீனா விளம்பரப்படுத்தி இருந்தார்.

இந்த விளம்பரத்தை பார்த்து திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் மேற்கண்ட பாஸ்ட் கார்கோ பாக்கெர்ஸ் நிறுவனத்தை அணுகி, குஜராத் மாநிலத்தில் வசிக்கும் தனது மகனுக்கு மோட்டார் சைக்கிளை அனுப்பி வைக்க வேண்டும், என்று கேட்டார். அதற்கு சம்மதம் தெரிவித்த பிரவீனா, அதற்கான சர்வீஸ் தொகையாக ரூ.9440-ஐ ஆன்லைன் மூலம் பெற்றுக்கொண்டார். பின்னர் தனலட்சுமியிடம் இருந்து மோட்டார் சைக்கிளை சிறிய வேனில் வந்து பிரவீனா ஏற்றிச்சென்றதாக தெரிகிறது.

அனுப்பாமல் மோசடி

ஆனால் குஜராத்துக்கு, குறிப்பிட்ட மோட்டார் சைக்கிள் போய்ச் சேரவில்லை. இதுபற்றி கேட்ட போது, கண்டிப்பாக மோட்டார் சைக்கிள் குஜராத் போய் சேர்ந்து விடும் என்று பிரவீனா ஏமாற்றி வந்துள்ளார். இதுபற்றி தனலட்சுமி அண்ணாசதுக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, பிரவீனா ஒரு மோசடிப்பேர்வழி என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. பிரவீனா மீது நடவடிக்கை எடுக்க இணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையிலான தனிப்படை போலீசார், பிரவீனாவையும், அவருக்கு உதவியாக செயல்பட்ட சஞ்சய் (19) என்பவரையும் கைது செய்தனர்.

வாகனங்கள் மீட்பு

சோழவரம் பகுதியில் உள்ள குடோனில் இதுபோல் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஏமாற்றிய 4 வாகனங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனங்களை விற்று மோசடியில் ஈடுபட பிரவீனா திட்டம் தீட்டி இருந்துள்ளார். அவரது இந்த நூதன மோசடி வித்தையை கண்டுபிடித்த போலீசார், பதுக்கி வைத்திருந்த 4 வாகனங்களையும் மீட்டனர். அதில் தனலட்சுமியின் வாகனமும் ஒன்று. பிரவீனா இதுபோல ஏற்கனவே 15 வாகனங்களை வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, அவற்றை விற்று மோசடி செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதுபற்றியும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம், என்று போலீசார் தெரிவித்தனர். கைதான பிரவீனாவும், சஞ்சையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்