புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை கைவிட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2021-10-21 17:16 GMT
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், பாலாறு, தென்பெண்ணை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் சில ஆண்டுகளுக்கு முன் 46 மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதால் தமிழகத்தில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டன. மணல் குவாரிகளுக்கு எதிராக பா.ம.க. மேற்கொண்ட அரசியல் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளின் பயனாக, தமிழகத்தில் மணல் குவாரிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு, இப்போது ஒட்டுமொத்தமாகவே 7 ஆற்று மணல் குவாரிகள் மட்டும்தான் செயல்பட்டு வருகின்றன. மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இப்போதும் நடத்தி வருகிறார்.

அரசியல் ரீதியாகவும், சட்டப்படியும் போராடி மூடப்பட்ட மணல் குவாரிகளை யாரோ சிலரின் லாபத்துக்காக மீண்டும் திறக்கக்கூடாது. அவ்வாறு திறப்பது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவித்து விடும். எனவே, மணல் இறக்குமதியை நிறுத்தி விட்டு, 15 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, தமிழகத்தின் ஆறுகளில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை அமைத்து நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த வேண்டும். மணல் இறக்குமதியையும், எம். சாண்ட் உற்பத்தியையும் அதிகரித்து கட்டுமானத்திற்கு தட்டுப்பாடின்றி மணல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்