என்ஜினீயரிங் படிப்பு: துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

என்ஜினீயரிங் படிப்பில் துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-10-21 21:22 GMT
சென்னை, 

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதற்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 17-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 440 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. முதற்கட்ட கலந்தாய்வு நிறைவில் 89 ஆயிரத்து 187 இடங்கள் நிரம்பி இருந்தன.

இதையடுத்து துணை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு விண்ணப்பப்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த 14-ந்தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்து வந்தனர். விண்ணப்பப்பதிவு முடிந்த நிலையில், 9 ஆயிரத்து 463 பேர் துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பப்பதிவு செய்தனர். அவற்றில் 9 ஆயிரத்து 113 பேர் தகுதியுடையவர்களாக கருதப்பட்டு இருக்கின்றனர்.

அந்தவகையில் தகுதியுடையவர்களுக்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை நேற்று வெளியிட்டு இருக்கிறது. தரவரிசை பட்டியல் வெளியான நேற்று முதல் கலந்தாய்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை விருப்ப கல்லூரிகளை தேர்வுசெய்ய மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதில் அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவிலும் விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து நாளை(சனிக்கிழமை) தற்காலிக ஒதுக்கீடும், நாளை மறுதினம்(ஞாயிற்றுக்கிழமை) இறுதி ஒதுக்கீட்டு ஆணையும் கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்