முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 8 மணி நேரம் விசாரணை

ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மீண்டும் விசாரணைக்கு வருவேன் என நிருபர்களிடம் அவர் தெரிவித்தார்.

Update: 2021-10-25 23:49 GMT
முன்னாள் அமைச்சர்

தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விஜயபாஸ்கர் வீடு உள்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரூ.25 லட்சம் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விஜயபாஸ்கர், அவருடைய மனைவி விஜயலட்சுமி, தம்பி சேகர் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக அவர் ஆஜராகவில்லை.

8 மணி நேரம் விசாரணை

இந்த நிலையில் அக்டோபர் மாதம் 25-ந்தேதி(நேற்று) ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சம்மன் அனுப்பினார்கள். இதையடுத்து நேற்று காலை 10.50 மணியளவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வக்கீல்களுடன் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு வந்தார்.

லஞ்ச ஒழிப்பு தெற்கு மண்டல சூப்பிரண்டு சண்முகம், கரூர் மாவட்ட துணை சூப்பிரண்டு நடராஜ் ஆகியோர் விசாரணையை தொடங்கினர். காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 மணிக்கு முடிந்தது. அப்போது சொத்து சேர்த்தது தொடர்பாக பல கேள்விகளை கேட்டனர். அதற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.

இன்றும் விசாரணை

சுமார் 8 மணி நேர விசாரணை முடிந்து விஜயபாஸ்கர் வெளியே வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், என்ன விசாரணை நடந்தது? என கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர், “நாளை (அதாவது இன்று) மீண்டும் விசாரணைக்கு வருவேன்” என்று கூறிவிட்டு சென்றார்.

மேலும் செய்திகள்