தமிழ்நாட்டிற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு!

தமிழகத்துக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-10-27 05:17 GMT
கோப்புப்படம்
சென்னை,  

தமிழகத்தில் யூரியாவின் தேவை அதிகரித்ததைத்தொடர்ந்து, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர். மேலும், அதிக அளவு தேவைப்படும் யூரியா தங்கு தடையின்றி நியாயமான விலையில், எவ்வித நிபந்தனையுமின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய உரத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், “வெகு விரையில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு, டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கான உரத் தேவை அதிகரித்துள்ளதால், தமிழ்நாட்டிற்கு கூடுதல் உரம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அதில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். 




இந்நிலையில் தமிழகத்துக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசிற்கு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி எழுதிய கடிதத்தினைத் தொடர்ந்து, மத்திய அரசு 90,000 மெட்ரிக் டன் யூரியாவை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. 

தமிழ்நாட்டில் தற்சமயம் நிலவிவரும் சாதகமான பருவமழை காரணமாக, 13.747லட்சம் ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டதில், இதுநாள்வரை 7.816 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நடப்பு சம்பா (இராபி) பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களான சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றின் சாகுபடி ஒட்டுமொத்தமாக 24.829 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக யூரியா மற்றும் டிஏபி உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. 

அக்டோபர் மாதத்திற்கான யூரியா, டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்கள் முறையே 1,43,500 மெட்ரிக் டன், 4,480 மெட்ரிக் டன்  மற்றும் 8,140 மெட்ரிக் டன் என மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. யூரியா 1,43,500 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இதுநாள்வரை உர உற்பத்தி நிறுவனங்களால் 77,863 மெட்ரிக் டன் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மத்திய அரசின் ஒதுக்கீட்டின்படி 63,000 மெட்ரிக் டன் இறக்குமதி யூரியா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்