ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாக நீடிக்கிறது.

Update: 2021-10-27 19:23 GMT
தர்மபுரி, 

கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. 

அதன்படி நேற்று மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாக நீடிக்கிறது.

மேலும் செய்திகள்