கோவில் நகைகளை உருக்குவதற்கு தடை...! சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-10-28 07:19 GMT
கோப்புப்படம்
சென்னை, 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்றி, அதனை வைப்பு நிதியில் வைத்து வரும் தொகையை பயன்படுத்தி கோவிலுக்கு தேவையான பணிகள் செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீதான விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல கோவில்களில் அறங்காவலர்கள் பணி நிரப்பப்படாமல் உள்ள நிலையில், கோவில் நகைகளை உருக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு சந்தேகத்தை எழுப்புகிறது என்று கூறினார். இதனை கருத்தில் எடுத்துக் கொண்ட ஐகோர்ட்டு, அறங்காவலர்களை நியமிக்கும்வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

மேலும், கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க அனுமதி அளிக்கப்படுவதுடன், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கினை டிசம்பர் 15ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.

மேலும் செய்திகள்