மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஓட்டல் ஊழியர் கைது

மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஓட்டல் ஊழியர் கைது.

Update: 2021-11-01 23:28 GMT
சென்னை,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் செல்போனில் பேசினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக கூறிவிட்டு அவர் போனை வைத்துவிட்டார்.

உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சேர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை சுற்றி மோப்ப நாய்களுடன் சோதனை போட்டனர். சோதனையில் யாரும் வெடிகுண்டு வைக்கவில்லை என்றும், இது வெறும் மிரட்டல் தான் என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மிரட்டல் விடுத்தவரின் செல்போன் எண்ணை வைத்து, அவர் யார் என்று கண்டுபிடித்து கைது செய்தனர். அவரது பெயர் பழனிவேல் (வயது 40). கடலூரை சேர்ந்தவர். சென்னை மாம்பாக்கத்தில் ஓட்டல் ஊழியராக வேலை செய்கிறார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சினிமா படத்தில் தான் பாடுவதற்கு ஆசைப்படுவதாகவும், இதற்காக அவரது கவனத்தை ஈர்க்க இதுபோன்ற மிரட்டல் செயலில் ஈடுபட்டதாக பழனிவேல், போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்