தொழிலதிபரை கடத்தி சொத்துக்கள் அபகரிப்பு: உதவி கமிஷனர் உள்பட 6 போலீசார் பணியிடை நீக்கம்

தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் போலீஸ் உதவி கமிஷனர் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2021-11-03 00:01 GMT
திரு.வி.க.நகர்,

கடந்த 2019-ம் ஆண்டு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி செங்குன்றம் அருகே உள்ள பண்ணை வீட்டில் அடைத்து வைத்து, சொத்துக்களை அபகரித்ததாக திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தொழிலதிபர் கடத்தல் மற்றும் சொத்துக்கள் அபகரித்த விவகாரத்தில் தொடர்புடைய திருமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் உள்ளிட்ட 3 போலீசார் மற்றும் ஆந்திர தொழிலதிபர் என 10 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

9 பேர் தலைமறைவு

இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான போலீஸ் அதிகாரிகள் உள்பட மீதமுள்ள 9 பேரும் தலைமறைவாகி இருப்பதால் சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் சிவகுமாருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். குறிப்பாக சென்னை முகலிவாக்கம் மற்றும் மதுரை உசிலம்பட்டியிலுள்ள அவரது வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

6 பேர் பணியிடை நீக்கம்

இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள உதவி கமிஷனர் சிவகுமார் உள்பட 6 பேர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கமிஷனருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.

அதனடிப்படையில் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், போலீஸ்காரர்கள் கிரி, ஜோசப், ஜெயகுமார் ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு சார்பில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்