வனவிலங்கு மோதலினால் உயிரிழப்போர் குடும்பத்திற்கான இழப்பீடு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

வனவிலங்கு மோதலினால் உயிரிழப்போர் குடும்பத்திற்கான இழப்பீடு ரூ.5 லட்சமாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-11-03 15:01 GMT
சென்னை, 

தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே எழக்கூடிய மோதல்களை குறைப்பதற்கு நன்றாக திட்டமிட்டு ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதுபோன்ற மனித, விலங்கு மோதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

அந்த வகையான மோதலுக்கு உள்ளாகி யாரும் இறக்க நேரிட்டாலோ அல்லது நிரந்தரமாக செயலிழப்பிற்கு ஆளானாலோ ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் அரசு உத்தரவிட்டது. அதன்படி அதற்காக ரூ.6.42 கோடி தொகையையும் அரசு வழங்கியுள்ளது. 

இந்த நிலையில் இழப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் செப்டம்பர் 3-ந் தேதியன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை செயல்படுத்தும் வண்ணம், அதற்கான அரசாணை வெளியிடப்படுகிறது. மற்ற சம்பவங்களுக்கான இழப்பீட்டுத் தொகையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்