பருவமழை தீவிரம்: தயார்நிலையில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படை

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக செல்லும் வகையில் தேசிய-மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார்நிலையில் இருக்கிறார்கள் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-03 22:56 GMT
சென்னை,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் கடந்த 2-ந்தேதி வரை 261.7 மி.மீ. பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவான 190.9 மி.மீ.ஐ விட 37 சதவீதம் கூடுதல் ஆகும்.

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த 2-ந்தேதி வரை இயல்பான மழை அளவை (6,801.1 மி.மீ.) விட 36 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 58 அணைகள் 50 சதவீதத்துக்கும் மேல் நிரம்பியுள்ளன. வடகிழக்கு பருவமழைக்காலத்தில் சென்னை மாவட்டத்தில் 7 சதவீதம் குறைவாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1 சதவீதம் குறைவாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 சதவீதம் கூடுதலாகவும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 16 சதவீதம் கூடுதலாகவும் மழை பதிவாகியுள்ளது.

மழைக்காலத்தில் சென்னையில் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 37, அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 88 உள்ளன. இதேபோல பிற மாவட்டங்களிலும் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள், அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் உள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சென்னையில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், மாவட்டங்களில் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணம் இல்லா தொலைபேசியுடன் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கிவருகின்றன. பொதுமக்கள் TNSMART என்ற இணையதளத்திலும், 9445869848 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

பேரிடர் மீட்பு படை

வானிலை முன்னறிவிப்புகளை உடனுக்குடன் தெரிவிக்க மீனவர்களுக்கு நவீன சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5 ஆயிரத்து 106 நிவாரண முகாம்களும் தயார்நிலையில் உள்ளன. பேரிடர் காலங்களில் ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்காக ‘ஹெலிபேடுகள்’ தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வருவாய் நிர்வாக கமிஷனர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் சுப்பையன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்