கோவை : கார் மீது இரு சக்கர வாகனம் மோதி 7 வயது சிறுவன் பலி

கோவை கருமத்தம்பட்டி அருகே சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது பைக் மோதிய விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்தார்.;

Update:2021-11-04 11:40 IST
கோவை,

கோவை கருமத்தம்பட்டி அடுத்த முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (37). இவர் முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

சிவக்குமார் அவரது  மனைவி ரம்யா(30) மற்றும் இவரது இரு மகன்கள் பிரணவ் (7) சாய் (2) ஆகிய நான்கு பேரும் பைக்கில் தீபாவளி பண்டிகைக்காக குன்னத்தூர் பகுதியில் உள்ள  ரம்யாவின் தாயார் வீட்டிற்கு சென்றனர்.

சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கணியூர் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்த  போது சாலையோரம் நிறுத்தப்பட்டு  இருந்த கார் மீது பைக்  மோதியது.  இதில் சிவக்குமாரின் 7 வயது மகன் பிரணவ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது , அவரது மனைவி மற்றும் மற்றொரு குழந்தைக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டது. 

இதனையடுத்து, உடனடியாக அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனை செல்லும் வழியில் சிறுவன் பிரணவ் பரிதாபமாக உயிர் இழந்தார். 

காயம் அடைந்த அவரது மனைவி ரம்யா மற்றும் சிவகுமார் மற்றொரு குழந்தை சாய் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்