மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதை அமைச்சர் துரைமுருகன் இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறார்.

Update: 2021-11-16 00:22 GMT
சேலம், 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் மேட்டூர் அணைக்கு கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினாலும் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அணையின் வரலாற்றில் 41-வது முறையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அந்த உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை புரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதை அமைச்சர் துரைமுருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறார். மேலும் அணையின் கொள்ளளவு, நீர்வரத்து, உபரிநீர் வெளியேற்றம், அணையின் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கரையோர பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதற்காக அவர் கார் மூலம் சேலம் வருகிறார். காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை பார்வையிடுகிறார். அவருடன் நீர்வளத்துறை தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உள்பட அரசு உயர் அதிகாரிகள் உடன் செல்கிறார்கள்.

பின்னர் அவர்கள் அணையின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள் இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் மேட்டூர் திப்பம்பட்டியில் நடைபெற்று வரும் பிரதான நீரேற்று நிலைய பணிகளை பார்வையிடுவதுடன், திப்பம்பட்டியில் இருந்து மேட்டூர் உபரிநீரை மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் பணியையும் பார்வையிடுகிறார். பின்னர் அவர் சென்னை திரும்புகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

மேலும் செய்திகள்