லஞ்சப்புகார்: வணிகவரித்துறை உதவி கமிஷனருக்கு 2 ஆண்டு ஜெயில்

லஞ்சப்புகார்: வணிகவரித்துறை உதவி கமிஷனருக்கு 2 ஆண்டு ஜெயில் சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு.

Update: 2021-11-22 19:24 GMT
சென்னை,

செங்கோட்டையைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர், ஆரஞ்ச் ஹெல்த்கேர் எனும் மருந்து நிறுவனம் நடத்தி வருகிறார்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், செங்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 2012-ம் ஆண்டு இவர், தனது நிறுவனத்தை வணிகவரித்துறையின் சென்னை மத்திய விற்பனை மதிப்பீடு வட்டத்தில் இருந்து, செங்கோட்டை வட்டத்திற்கு மாற்றக்கோரி வணிக வரித்துறை, மயிலாப்பூர் மண்டல உதவி கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது பணியில் இருந்த உதவி கமிஷனர் விஜயராகவன், ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு வைத்தியநாதன் ரூ.15 ஆயிரம் கொடுப்பதாக கூறி உள்ளார். அதற்கு அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து வைத்தியநாதன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதன்பின்பு, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில் லஞ்சப்பணத்தை வைத்தியநாதன் கொடுத்த போது, அதனை பெற்றுக்கொண்ட விஜயராகவனை அங்கு மறைந்திருந்த போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் மனோகரன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, உதவி கமிஷனர் விஜயராகவன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று விஜயராகவன் அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஒரு மாதத்துக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்